Saturday, 5 November 2016

ஊழிய அழைப்பு

ஊழிய அழைப்பு.

இன்று தேவ பிள்ளைகள் வைராக்கியம் கொண்டு தேவனுக்கு ஊழியம் செய்ய ஒப்புக் கொடுப்பதை பல நேரங்களில் பார்த்து, மகிழ்ச்சி அடைகிறேன்.

தேவனுக்கு ஊழியம் செய்வது ஒரு சிலாக்கியம். ஊழியம் செய்ய தேவ அழைப்பு இருக்கும் போது ஊழியம் பெரிய அளவில் கர்த்தருக்கு மகிமை சேர்க்கும். ஊழியம் செய்வதற்கு வயது வித்தியாசம் இல்லை.

ஆபிரகாம் முதிர்வயது உள்ளவனாக இருந்த போது வாக்குதத்தம் செய்யப் பட்ட ஈசாக்கை பெற்றான். ஈசாக்கிற்கு பிறகும் மறுமனையாட்டிகளை மணம் செய்து பிள்ளைகள் பெற்றான் என்பது நாம் அறிந்த ஒன்றே.

ஆனால் கர்த்தர் வாக்குதத்தம் செய்த போது அவன் தனக்குள் சிரித்து முதிர்வயதில் எனக்கு பிள்ளையா என்று நினைத்து, இஸ்மவேலுக்காக வேண்டுகிறான். வாக்குதத்தத்தின் பிள்ளை ஈசாக்கு பிறந்த பின் அவனுக்கு புரிந்து விட்டது. ஜாதிகளின் தந்தை என்ற வாக்குதத்தம் நிறைவேற மறுமனையாட்டிகளை மணம் செய்தான் போலும்!

ஆக ஊழியம் சிறு வயதிலும் (இயேசு பன்னிரண்டு வயதிலேயே கூறுகிறார், லூக்கா 2:49. ... என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று நீங்கள் அறியீர்களா ?) மூப்பிலும் கர்த்தர் உங்களை அழைத்தால் கீழ்படிந்து ஊழியம் செய்யுங்கள்.

மோசேவை எரிகின்ற முட்செடியில் கர்த்தர் சந்தித்து பேசும் போது அவனும் வயது சென்றவன் தான். 40 வயது வாலிபனாகும் (நமக்கு இப்போது 40 முதிர்வயது!) வரையில் பார்வோனின் குமாரனாக இருந்து, கொலைக் குற்றத்திற்காக தப்பிப் போய் 40 வருடம் ஆடு மேய்த்தவன் மோசே. 80 வயதில் தானே அவனுக்கு ஊழியம் செய்ய தேவ அழைப்பு வந்தது.

"எனக்கு ஊழியம் செய்வதற்கு அழைப்பு வந்தது. ஆனால் என் குடும்பம், என் பிள்ளைகளின் வாழ்க்கை நிலைவரப்பட்ட பின்னர் ஊழியம் செய்ய ஒப்புக் கொடுப்போம்" என்று கூறும் சிலர் உள்ளனர்.

"கலப்பையின் மேல் கைவைத்து பின்னிட்டு பார்ப்பவன் பரலோக ராஜ்யத்திற்கு உகந்தவனல்ல" என்ற வசனத்தை ஆதாரமாக சொல்பவர் உண்டு.

அழைப்பு வந்தப்பின் தாமதிப்பது என்பது தாலந்தை மண்ணில் புதைத்து வைக்கும் ஊழியனுக்கு ஒப்பாக அல்லவா இவர்கள்  இருக்கிறார்கள்!

சிலரோ, எனக்கு தேவ அழைப்பு  வந்தது. ஆனால் என் மனைவி / கணவன் என்னோடு ஊழியத்தில் செல்ல ஆயத்தமாக இல்லை, ஆதலால் அவர் ஒப்புக் கொடுக்கும் வரை ஊழியம் செய்ய ஒப்புக் கொடுப்பது கடினம் என்று சொல்வதை காண்கிறோம்.

தேவ சமூகத்தில் அமர்ந்து முதலில் நீங்கள் ஒப்புக் கொடுங்கள். பின்னர் உங்கள் மனைவியை / கணவனை கர்த்தர் வழி நடத்தி வரும்படி ஜெபம் செய்யுங்கள்.

எந்தவொரு நிலையிலும் கணவனோ மனைவியோ உங்கள் ஊழியத்தை ஏற்காதிருக்கும் போது, வாழ்க்கை கடினமாகும்.

ஆனாலும் சிலர் பிரசங்கிக்கின்றது போல், தேவனுக்கு வைராக்கியமாக தாவீது மீகாளுக்கு செய்தது போலே செய்யும் முன், தேவ சித்தத்தை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த நிகழ்வை காரணங்காட்டி, தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கக் கடவன்.

ஊக்கமான ஜெபத்தை கர்த்தர் கேட்டு, அதற்கான பலனை கொடுக்கிறார். ஆச்சரியமாக காரியங்களை செய்ய கர்த்தர் வல்லவராக இருக்கிறார்.

தேவ அழைப்பை அறிந்து, அதற்கு முழுமையாக ஒப்புக் கொடுங்கள். பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான், இவர்கள் அனைவரும் இயேசு கிறிஸ்து அழைத்த உடனே எல்லாவற்றையும் விட்டு பின்சென்றவர்கள். ஆயக்காரனாகிய மத்தேயுவும் அப்படியே சென்றான்.

நாம் அறிந்த படி இவர்களில் பேதுரு நிச்சயமாக திருமணம் ஆனவன். அவன் மாமியை (மாமியார் என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இருக்கிறார்கள்) இயேசு சுகமாக்கினார் என்பதை வாசிக்கிறோம்.

யாதொரு உலகப்பிரகாரமான ஆஸ்தியையோ, ஆசீர்வாதத்தையோ, உறவையோ விட்டு இயேசுவை பின்பற்றுவோருக்கு இம்மையில் நூறத்தனையாகவும், மறுமையில் நித்திய ஜீவனும் வாக்குதத்தம் செய்யப் பட்டு இருக்கிறது.

கர்த்தர் உங்களை அழைத்தால் கீழ்படிந்து ஊழியம் செய்யுங்கள். என்னத்தை உண்போம், என்னத்தை உடுத்துவோம் என்று அஞ்ஞானிகளை போல் நாடி தேடாமல், என் கர்த்தர் என்னை போஷிக்க, உடுத்துவிக்க வல்லவராக இருக்கிறார் என்று விசுவாசித்து ஊழியம்  செய்யுங்கள்.

முன்பே ஊழியமா அல்லது வேலையா என்ற தலைப்பில் பதிவு உள்ளது. தேவைப்பட்டால் சென்று வாசியுங்கள்.

http://secretsofkingdomofgod.blogspot.in/p/6.html

தேவன் உங்களை வழிநடத்தும் படியே கீழ்படிந்து செய்வது, தேவனுடைய பார்வையில் பிரீதியாக உள்ளது.

கர்த்தர் தாமே உங்களை வழிநடத்தி தம்முடைய மகிமைக்கென பயன்படுத்துவாராக. ஆமென்.

No comments:

Post a Comment