அக்டோபர் மாத இறுதியில் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் தீபங்களை ஏற்றி ஒளித்திருவிழாவாக கொண்டாடுவதைக் காண்கிறோம். இந்தப் பண்டிகை நாளிலே மெய்யான ஒளியாம் மீட்பர் இயேசுவின் நற்செய்தி தன்னை அறிந்திட நாம் ஜெபம் செய்வது அவசியம்.
நம் பிதாவாகிய தேவனுக்கு ஜோதிகளின் பிதா என்று ஒரு நாமம் உண்டு.
யாக்கோபு 1:17 நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.
சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவர் என்ற நாமமும் நம் பிதாவிற்கு உண்டு. தீமோ 6:16
இயேசு ஒளிகுறித்துக் கூறும் போது....
யோவான் 12:35. ...இன்னும் கொஞ்சக்காலம் ஒளி உங்களிடத்தில் இருக்கும்; இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள்; இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியான்.
36. ஒளி உங்களோடிருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள் என்றார்.
வீசொளி, காலஞ் சிறிதும்மோ டேயிருக்கும்
வீசொளி உங்களோ டுள்ளப்போ -வீசொளியில்
நீர்நடப்பீர்; காரிருள் வெற்றிக் கொளாமலே
நீர்தான் ஒளியில் நட
இருளில் நடப்பவர் எங்கேத்தாம் செல்வ
இருளில் தெரியா தவர்க்கு -மருளா,
இருக்குங்கால் ஏற்பீர் ஒளியையே; ஏற்றால்
இருப்பீ ரொளிசார்ந்தோ ராய்
இயேசு நாதர் வெண்பா 748 & 749
நாம் அறிய வேண்டிய மற்றொரு சத்தியம் மெய்யான ஒளி இயேசுவே.
யோவான் 1:9 உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
தீபங்களை ஏற்றி இருளை அகற்ற முயலும் மனிதர்களை, மெய்யான ஒளி இயேசுவே என்று எப்படிக் காட்டுவது?
இயேசு என்ன சொல்கிறார் பாருங்கள்
நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாய் இருக்கிறீர்கள் மத்தேயு 5:14
இயேசு மெய்யான ஒளி.
நாம் உலகத்திற்கு வெளிச்சமாய் இருக்கிறோம். ஏனெனில் நம்மை பிரகாசிப்பிக்கிற ஒளி, இயேசு.
நம்மில் இயேசு இருப்பதால் நாம் பிரகாசித்து உலகத்திற்கு ஒளியாக இருக்கிறோம்.
ஒவ்வொரு நாளும் இருளானது நம்மை பற்றிக் கொள்ளாதபடி நாம் நமது ஜெபங்களில் மெய்யான ஓளி இயேசுவை நம்முள் பிரகாசிக்கும்படி, அவர் ஒளீயை நம்மிலிருந்து பிரகாசிக்கச் செய்யும்படி வேண்டிக்கொள்வோம்.
இயேசுவைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி பிம்பமாய் நாம் வாழ வேண்டும். இயேசுவைப் போல வாழ்ந்தாலே அவரால் பிரகாசிக்கப்பட்டு நம்மால் ஒளிவீசி வெளிச்சம் கொடுக்க முடியும்.
அன்பான தேவ பிள்ளைகளே, மக்களை அவர்களது மூடநம்பிக்கைகளில் இருந்து கொண்டுவருவது கடினம். ஆனாலும், சத்திய வசனமாகிய நம் வேதாகம வசனங்களை விதைகளாய் விதைப்போம். ஒளித்திருநாளில் சோதிகளின் பிதாவின் சித்தத்தை அறிந்து, ஒவ்வொரு நாளும் ஒளித்திருவிழாவாக நாம் கொண்டாடும் நாள் வெகு அருகாமையில் உள்ளது.
மத்தேயு 13:43 ... நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள்
வெளி 22:5 அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்.
அல்லேலூயா. அன்பானவர்களே எப்படிப்பட்ட நித்திய ராஜ்யம் நமக்கு வாக்குதத்தம் செய்யப்பட்டுள்ளது! நீதிமான்களாய் சூரியனைப் போல பிரகாசிக்கவும், தேவனாகிய கர்த்தரே நம்மேல் பிரகாசிக்கும் நாளும் மிக அருகாமையில் உள்ளது. இந்த வாக்குதத்ததிற்காய் நாம் நம்முடைய ஓட்டத்தில் ஒழுங்கின்படியே ஒடி முடிப்போம்.
No comments:
Post a Comment