இன்றைய சபைகளில், பெரும்பாலும் பெந்தகொஸ்தே, ஏஜி சார்ந்தவைகளில், அந்நிய பாஷையில் பேசினாலே அபிஷேகம் பெற்றவர்கள் என்றும், நவமான பாஷையில் பேசாதிருந்தால் அபிஷேகம் பெறாதவர்கள் எனக்கூறுவதும் மிகச் சாதாரணமாக நடந்து வருகிறது.
நான் ஞானஸ்நானம் எடுத்த சபையில் ஞானஸ்நானம் முன்னர் நடத்தும் வகுப்பில் அபிஷேகம் பெறாதவர்கள் அந்நிய பாஷை அபிஷேகத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அந்நிய பாஷை அபிஷேகத்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார் அந்த வகுப்பை எடுத்த மூத்த பெண்மணி.
அபிஷேகம் என்றால் என்ன? வேதாகமத்தில் உள்ள நிகழ்வுகளைக் காணலாமா?
நவமான பாஷைகள் பேசுவதை இயேசு தன்னை விசுவாசிக்கிறவர்களின் அடையாளங்களில் ஒன்றாகக் கூறுகிறார். மாற்கு 16:17
ஆனால் அது ஒன்றே அடையாளம் ஆகாது. இயேசுவின் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவது, சர்ப்பங்களை எடுப்பது; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாமல் இருப்பது, வியாதியஸ்தர் மேல் கைகளை வைத்தால் வியாதிகள் சொஸ்தமடைவது என்று வேறு அடையாளங்களும் உண்டே.
பெந்தகொஸ்தே நாளில் கூடியிருந்த சீஷர்கள் மேல் பிளவுண்ட அக்கினி நாவுபோல் வந்து, அபிஷேக ஆவியால் சீஷர்கள் நவமான பாஷைகள் பேசுவதை காண்கிறோம். ஆனாலும் சுற்றியிருந்த மக்கள் தம் தம் மொழிகளில் பேசுவதை அறிகிறார்கள். வேற்று மொழி பேசும் மக்களுக்கு அவரவர் மொழியில் சுவிசேஷம் பிரசங்கிக்கின்றார்கள். (அப் 2ம் அதிகாரம் வாசிக்கவும்)
*ஞானஸ்நானம் எடுத்தாலே அபிஷேகம் - தவறான கருத்து*
சிலர் ஞானஸ்நானம் எடுத்தாலே அபிஷேகம் கிடைக்கும் என்று கூறுவர்.
புறஜாதியருக்கு சுவிசேஷம் பிரசங்கிக்க பேதுருவை கர்த்தர் அனுப்பிய போது சுவிசேஷத்தை கேட்டவர்கள் ஜெபிக்கும் போது அபிஷேகம் பெற்றதை கண்டதும் பேதுரு அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க தீர்மானிக்கிறான்.(அப் 10:47)
ஆகையால் ஞானஸ்நானம் எடுத்தவர்களே அபிஷேகம் பெறவேண்டும் என்பது ஒரு தவறான பிரசங்கம். ஞானஸ்நானத்திற்கு ஆவியானவரின் அபிஷேகம் தேவை என்று கொள்ளக்கூடாதது எப்படியோ அப்படியே ஞானஸ்நானம் எடுத்தாலே அபிஷேகம் கிடைக்கும் என்றுகொள்ளக்கூடாது.
என் வாழ்வில் ஞானஸ்நானம் எடுக்கும் முன்னரே ஆவியானவரின் அபிஷேகம் கிடைத்தது. (அபிஷேகம் என்றால் என்ன என்றே தெரியாமல் அபிஷேகம் தாரும் தேவனே என்று கேட்டு பெற்றுக் கொண்டவன் நான். முன்னே குறிப்பிட்ட ஞானஸ்நான வகுப்பில் சுமார் 30 பேர் இருந்தனர். இவர்களில் மூவர் மட்டுமே அபிஷேகம் பெற்றிருந்தோம். )
*யாருக்கு அபிஷேகம்?*
ஆவியானவரின் அபிஷேகம் விசுவாசிகளுக்கு மட்டும் தான் கிடைக்கும் என்று சிலர் பிரசங்கிப்பர். இதற்கும் ஒரு நிகழ்வின் மூலம் மறுப்பு காணலாம்.
சவுலை ராஜரீகத்தில் இருந்து கர்த்தர் தள்ளி விட்டு தாவீதை அபிஷேகம் செய்ய சாமுவேலை கர்த்தர் பணிக்கிறார். இதன் பின்னர் கோலியாத்தை கொல்கிறான் தாவீது. பின்னர் பாடிய இஸ்ரேல் மக்கள் சவுலை கீழாக பேசி தாவீதை மேன்மையாக பாடுகிறார்கள். அந்த நொடியிலிருந்து சவுல் தாவீதை கொல்ல வகை தேடுகிறான். தாவீது பல முறை தப்பித்து போகிறான். அப்படியே தப்பிக்கும் போது ஒரு முறை சாமுவேல் இருக்கும் இடத்திற்கு தப்பித்து போய் தாவீது தனக்கு நேர்ந்ததை சாமுவேலிடம் கூறுகிறான்.
சவுல் தாவீதை பிடித்து வர வேலையாட்களை அனுப்ப, சாமுவேலும் தாவீதும் ராமாவில் தங்கிருந்த இடத்திற்கு வர, வேலையாட்கள் யாவர் மேலும் தீர்க்கதரிசன ஆவி இறங்க, அவர்களும் தீர்க்கதரிசனங்கள் உரைக்கின்றனர்.
மூன்று முறை வேலையாட்களை அனுப்பினான் சவுல். மும்முறையும் வந்த வேலையாட்கள் தீர்க்கதரிசனம் உரைக்கின்றனர்.
கடைசியாக சவுலே வருகிறான் அவன் மேலும் தீர்க்கதரிசன ஆவி இறங்க தன் வஸ்திரத்தை கிழித்துக் கொண்டு தீர்க்கதரிசனம் உரைத்து ஒரு முழு நாள் வஸ்திரம் இல்லாது விழுந்து கிடந்தான். ( 1 சாமுவேல் 19)
ஆக யார் மேல் அபிஷேகம் வர வேண்டும் என்று தேவன் சித்தமாயிருக்கிறாரோ அவன் மேல் அபிஷேகம் வரும். சவுலோ அவன் வேலைக்காரர்களோ பட்சபாதம் இல்லை.
*சபைகளில், ஜெபக்கூட்டங்களில், தனி ஜெபங்களில் அந்நிய பாஷை பேசி ஆராதிப்பது சரியா?*
இது குறித்து பவுல் சொல்வதை காணுங்கள்.
I கொரிந்தியர் 14: 6. மேலும், சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை அறிவிக்கிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், அந்நியபாஷைகளில் பேசினால் என்னாலே உங்களுக்குப் பிரயோஜனம் என்ன?
I கொரிந்தியர் 14:9. அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித்தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே.
I கொரிந்தியர் 14:13. அந்தப்படி, அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம்பண்ணக்கடவன்.
I கொரிந்தியர் 14:19 அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்.
இந்த வசனங்களை ஏன் சபைகள் போதிப்பதில்லை? எவ்வளவு தெளிவான அறிவுரை இவை! மறைவாக இருக்கின்றதோ என்னவோ? தேவனே அறிவார்!
*அந்நிய பாஷை அவிசுவாசிகளுக்கு அடையாளம் - பவுல்*
I கொரிந்தியர் 14:22. அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது; தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது.
I கொரிந்தியர் 14:23. ஆகையால், சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?
ஆகவே தேவ பிள்ளைகளே, ஆவியானவரின் அபிஷேகம் என்று கருதப்படும் அந்நிய பாஷை அவிசுவாசிகளுக்கு அடையாளம்.
அர்த்தம் சொல்லாத அந்நிய பாஷை, வீணாக அல்லவோ இருக்கிறது? கருத்தே தெரியாமல் ஏதோ ஒரு பாஷையில் மற்றவர் கேட்க உரைப்பது எத்தகைய பலனைக் கொடுக்கும்?
*என் வாழ்வில் அந்நிய பாஷைகள்*
ஆவியில் நான் ஜெபிக்கும் போது நவமான பாஷைகளை தேவன் எனக்கு அருளினால், அந்த அந்நிய பாஷைகளின் அர்த்தத்தையும் விளக்க தேவன் வல்லவராயிருக்கிறார். அப்படியில்லாமல் என் தனி ஜெபத்தில் அந்நிய பாஷையில் நிரப்பி பேசவைத்து எனக்கு அர்த்தம் புரியாமல் இருந்தால், ஒரே காரணம் தான் இருக்க முடியும். எனக்கு தெரியத் தேவையில்லாத ஏதோ ஒன்றைக் குறித்து ஆவியானவர் என் மூலமாக ஜெபிக்கிறார்.
*பேசிய வார்த்தையை மீண்டும் மீண்டும் பேசுவது*
பேசிய வார்த்தைகளை நினைவில் கொண்டு பேசுவதும் தவறு. ஏனென்றால், தேவன் என்ன காரியத்திற்காக பேச வைத்தாரோ அதே காரியம் ஒவ்வொரு முறையும் பேச வைப்பாரா என்பதை நிதானித்தால், பேசுவது ஆவியானவரா அல்லது மாம்சமா என்பது விளங்கும். மாம்சத்தில் பேசும் அந்நிய பாஷை உளறலே தவிர வேறு இல்லை. இயேசு சொன்னதை நினைவில் கொள்ளுங்கள். ஜெபத்தில் வீண் வார்த்தையினால் அலப்பாதிருங்கள்.
*சபை ஆராதனைகளில் அந்நிய பாஷை*
சில விசுவாசிகள் அந்நிய பாஷை பேசாது இருந்தோம் என்றால் சபையார் அபிஷேகம் பெறாதவன் என்று என்னை நினைப்பார்கள் என்று தவறாக நினைத்து யாரோ பேசிய அந்நிய பாஷையை தானும் பேச முயலுவதுண்டு. இது எவ்வகையில் அந்நிய பாஷை அபிஷேகம்? சில சபைகளில் ஆராதனை வேளைகளில் அந்நிய பாஷை பேசி தேவனை ஆராதனை செய்யுங்கள் என்றும் கூறுகின்றனர். இதுவும் ஒரு வகையில் தவறானதே.
I கொரிந்தியர் 14: 27. யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்.
I கொரிந்தியர் 14:28. அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்.
எவ்வளவு சபைகளில், ஜெபக்கூட்டங்களில் அந்நிய பாஷைகளை பேசி அர்த்தத்தை சொல்கிறார்கள்?
*அந்நிய பாஷை வரத்திலும் சிறந்த பல வரங்கள் உண்டு.*
அந்நிய பாஷை மட்டுமே அபிஷேகம் என்று கொள்ளாதிருக்கக் கடவோம்.
தேவ ஆவியானவர் உங்களை வழிநடத்தி அந்நிய பாஷையோ, தீர்க்கதரிசனமோ உரைக்க வைத்தால், தேவனுடைய மகிமைக்கென கீழ்படியுங்கள். எங்கே உங்களை பேச வைக்கிறாரோ, அங்கே அதின் அர்த்தத்தையும் வெளிப்படுத்த நீங்கள் தேவனை மன்றாடுங்கள்.
ஆனாலும் தீர்க்கதரிசனமோ, அந்நியபாஷையோ, பிரசங்கமோ, அசுத்த ஆவிகளை துரத்துவதோ, இவை மட்டுமே வரமென்று எண்ணாதிருங்கள்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
[02/11 7:45 AM] Sai Giridhar: Many of you may be wondering why this group is bilingual, when all of the members in the group know to read Tamil. It is imperative to explain the LORD's plan.
This group is on Facebook and the reach of Facebook is worldwide. Already there are 2 international likes in the facebook, one from Africa and another from America. For the LORD’S word should reach as many Children as possible, Holy Spirit commissioned me to create this group bilingual. May these posts reach as many Lord's Children as possible. Let's Pray that LORD’S will be done. AMEN
இந்த குழுவில் உள்ளோர் பெரும்பாலும் தமிழ் படிக்க தெரிந்தவராக இருக்க ஏன் இந்தக் குழு இருமொழி குழுவாக ஏற்படுத்தி ஒவ்வொரு பதிவும் இருமொழிகளில் பதிவிடுகிற அவசியம் என்ன என்று நினைக்கிறீர்களா?
அதற்கான விடை... இந்த குழு Facebook தளத்திலும் உள்ளது. Facebook பக்கத்தின் வட்டணிக்கை மிகுதி. ஏற்கனவே ஆப்பிரிக்காவில் இருந்தும் அமெரிக்காவில் இருந்தும் தலா ஓரு பயனர் இருக்கிறார்கள். ஆகவே ஆவியானவர் வழிநடத்துதலின் ஆச்சரியம் என்ன என்று இப்போது அறிந்து கொள்ள முடிகிறது. எவ்வளவு தேவ பிள்ளைகளுக்கு இந்த பதிவுகள் பயன்பெற வேண்டுமோ அவ்வளவு பேருக்கும் இந்த பதிவுகள் போய் சேரும்படியாக தேவன் வடிவமைத்தது ஆச்சரியமே. தேவ சித்தம் நிறைவேற நாம் அனைவரும் ஜெபிப்போம்.