Thursday, 7 January 2016

மன்னிப்பு - இயேசுவைப் போல் வாழ்க்கை

பழைய ஏற்பாட்டில் மோசேவிற்கு கர்த்தர் நியாயப்பிரமாணத்தில் "கர்த்தராகிய நான் பரிசுத்தராய் இருப்பது போல் நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்" என்று கூறுவதைக் காண்கிறோம்

நமக்கு இயேசுவே பரிசுத்தராய் வாழ்ந்ததற்கான முன் மாதிரி.

ஆதியாகமம் 1:27 ல் நம்மை தேவ சாயலாக கர்த்தர் படைக்கிறார் என்பதைக் காண்கிறோம். மற்றும் தேவனுடைய சுபாவமாக ஆதியாகமம் 3:21ல் மன்னிப்பின் கிரியையையும் காண்கிறோம். 

கீழ்படியாமல் பாவம் செய்த ஆதாமிற்கும் ஏவாளிற்கும் தோல் உடைகளைச் செய்து ஏன் உடுத்த வேண்டும்? அப்படியே துரத்தியிருக்கலாமே! கர்த்தர் மன்னிக்கும் சுபாவத்தால் தான் இயேசுவை அனுப்புவதாக ஆதியாகமத்திலே “உன் வித்திற்கும் அவள் வித்திற்கும் பகையை உண்டாக்குவேன்” என்று கூறுவதும் மன்னிப்பினாலேயே!

தேவ சாயலாகவே மனிதன் படைக்கப்பட்டிருப்பதால் மனிதனும் மன்னிப்பதை சுபாவமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் பாவம் மனிதனை ஆளத்தொடங்கிய போது மன்னிப்பை விட்டு விடுகிறான். மனித சுபாவம் பாவ சுபாவமாக மாறுகிறது

இயேசு ஒரு தூய மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை காண்பிக்கும் வண்ணமாக பரத்திலிருந்து இறங்கி வருகிறார். அவர் வெளிப்படுத்திய சுபாவங்களில் மன்னிக்கும் சுபாவமும் ஒன்று
இயேசு தான் சிலுவையில் தொங்கிய போதும் தன்னை சிலுவையில் அறைந்த மக்களை மன்னிக்குமாறு பிதாவிடம் வேண்டுகிறார். அவருடைய ஊழியத்தின் நாட்களில் பாவ மன்னிப்பை முதலில் கொடுத்து, பின்னரே வியாதியுற்றவர்களை குணமாக்குகிறார். (மாற்கு 2:5)

மலைப்பிரசங்கத்தில் இயேசு நமக்கு ஜெபம் செய்ய கற்றுத்தரும் போது சொல்வதைக் காணுங்கள் " நாங்கள் எங்கள் கடனாளிகளுக்கு மன்னிப்பது போல எங்கள் கடன்களை மன்னியும்”

ஆக இயேசு நம்மை மன்னிக்க எதிர்ப்பார்க்கின்றதை வெளிப்படையாகச் சொல்கிறார். மற்றொரு இடத்தில். இரக்கமில்லாத ஊழியக்காரன் உவமையின் நிறைவாக இயேசு சொல்வதைக் காணுங்கள், "நீங்களும் அவனவன் தன்தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாக மன்னியாமற் போனால் என் பரம பிதாவும் உங்களுக்கு அப்படியே செய்வார்" (மத்தேயு 18)

இன்று நம்மை நாமே ஆராய்ந்துக் காண்போம். மனப்பூர்வமாய் நமக்கு எதிராக நம் சகோதரர் செய்த தப்பிதங்களை மன்னித்தோமா? இல்லையெனில், இன்றே தேவ சமூகத்தில் அமர்ந்து மன்னிக்கும் இருதயத்தை தாரும் கர்த்தாவே, என்று கேட்டு வாங்குவோம். நம்மெதிராக தப்பிதம் செய்தோரை மனப்பூர்வமாக மன்னிப்போம், ஏனென்றால் நமது தப்பிதங்களை அப்போது தான் பரமபிதா நம் தப்பிதங்களை மன்னிப்பார்.

கர்த்தர் உங்களுக்கு மன்னிக்கும் இருதயத்தை, வாழ் நாள் முழுவதும் மன்னிக்கும் சுபாவம் மாறாமல் இருக்க ஆசீர்வதிப்பாராக