*வீடு திரும்புங்கள். தந்தை உங்களுக்காக காத்திருக்கிறார்*
இந்தப் பதிவை படிக்கும் முன்பு, லூக்கா 15ம் அதிகாரம் படிக்கவும்.
இளைய குமாரன் கதையில் உள்ள ஆழமான கருத்துக்கள் தான் இன்றைய பதிவு.
இக்கதையில் ஒரு 3 பேர் உள்ள சிறு குடும்பம் குறித்து இயேசு கிறிஸ்து கூறியுள்ளார். இந்தக் குடும்பம் தான் விசுவாசிகளால் கட்டப்பட்ட கிறிஸ்துவின் சரீரமாகிய சபை.
1. விசுவாசிகள் நாம் அனைவரும் இந்த குடும்பத்தின் அங்கத்தினர்கள்.
2. நன்மை தீமை இரண்டில் நாம் எது வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம்.
3. நன்மையை தெரிந்து கொண்டால் பிதாவோடு வீட்டில் வாழலாம்.
4. இளைய குமாரனைப் போல் கெட்ட வழிகளை தெரிந்து கொண்டால், வழிதப்பி போவோம்
5. இந்த கதையில் காணுங்கள், வழிதப்பி போகும் முன்னர் தன் சொந்த உழைப்பின் பலனை அல்ல, தந்தையின் சொத்தில் தன் பங்கை பிரித்தெடுத்துக் கொண்டு செல்கிறான். எந்த ஒரு நல்ல ஈவும் ஜோதிகளின் பிதாவிடத்திலிருந்து நமக்கு வருகிறதல்லவா?
இக்காலங்களில் சொத்துக்களை குவிக்கும் தேவ ஊழியர் பலர் இதே போல் வழிதப்பியவர்களோ என்று வியக்கத் தோன்றுகிறது. இயேசுவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல. இயேசுவின் உபதேசம் "இல்வுலகத்தில் பொக்கிஷங்களை சேர்க்காதீர்கள்"
இப்படிப்பட்டவர்களை வீட்டினுள்ளே ஏற்றுக் கொள்ளாது, அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லாமலும் இருங்கள், ஏனெனில் அப்படி செய்தால் அவர்களின் அக்கிரமச் செயல்களில் நாம் பங்காளிகள் என்று 2யோவான் ல் குறிப்பிடப் பட்டுள்ளதை அறிவோம். (நேற்றைய வேத வாசிப்பு பகுதி அது)
6. இக்கதையில் தகப்பன் தன்னை விட்டு பிரிந்து சென்ற மகனை தேடிச் செல்லவில்லை. மகன் தீய வழியில் நடக்க விட்டு விடுகிறார். (இதனால் தானோ சொத்துக் குவிப்போரை விட்டு வைத்திருக்கிறார்!)
7. மகனும் எல்லா சொத்தும் செலவழித்தபின்பு, தந்தையின் அன்பை அறியாதே, தன் கைவேலை செய்து பிழைக்க எண்ணுகிறான்.
8. வேலையில் பிழைக்க முடியாமல், பஞ்சம் மேலோங்க, பன்றி மேய்க்க, பன்றியின் உணவாகிய தவிட்டினாலே வயிறு நிரப்ப எத்தனிக்கிறான்.
பஞ்சம் என்பது ஆவிக்குரிய வாழ்க்கையின் சரிவைக் குறிக்கிறது. பன்றிகள் மேய்த்தலோ, மேலும் கீழ்த்தரமான வாழ்க்கை முறையை குறிப்பிடுகிறது. ஏனெனில், யூதர்கள் பன்றியை ஒரு அசுத்த மிருகமாக கொண்டிருந்தனர். அதை தொடக் கூட மாட்டார்கள். பன்றிக் கறியை புசிப்பதை பாவமாக எண்ணினார்கள். ஏனெனில் நியாயப்பிரமாணத்தின்படி அது மீறுதலாகும். அப்படி இருக்கையில், பன்றி மேய்க்க, பன்றியின் உணவாகிய தவிட்டினாலே வயிறு நிரப்ப எத்தனிக்கிறான்.
தேவனை விட்டு வழிதப்பி போகும் மக்கள், விசுவாசத்தில் குறைவுபட்டு புறஜாதி எஜமானரின் அருவருக்கத்தக்க (லஞ்சம், அநீதியான வாழ்க்கை, வரி ஏய்ப்பு போன்ற செயல்களுக்கு) வேலை செய்ய வேண்டியிருக்கும்.
நம்மில் எத்தனை பேர் சாத்ராக் மேஷாக் ஆபத்நேகோ போல், உயிருக்கு ஆபத்து வந்தாலும் தேவ நீதியை கைக்கொண்டு நடக்கிறோம்? உங்கள் வாழ்க்கையில் அருவருக்கத்தக்க செயல்களை செய்திருப்பீரானால் மனந்திரும்பி, பிதாவிடத்தில் மன்னிப்பு கேட்கவேண்டும்.
9. தவிடும் கிடைக்காத போது தன் தந்தையிடம் தானிருந்த மகிமை நிலையை எண்ணுகிறான். எத்தனை முறை நாம் எண்ணியிருப்போம்?
'கர்த்தாவே உம்மில் முதலில் இருந்த அன்பு எனக்கு திரும்ப வேண்டும்' இப்படி எண்ணியோர் யாவரும் குறைவு படத் தொடங்கியோரே.
கர்த்தரின் அன்பு மாறாதது. நாமே மாறியிருக்கிறோம். இடைப்பட்ட காலத்தில் ஆவியின் வளர்ச்சியைக் கொண்டிருக்கிறோமா?
இல்லையெனில் இன்றே வீடு திரும்புவோம்.
10. தந்தை நமக்காக காத்திருக்கிறார். இரட்சிப்பு எனும் நல்லுடையை தந்து, மோதிரம் அணிவித்து, காலணி அணிவித்து, நமக்காக விருந்தை கட்டளையிடுகிறார். ஒரு வேலைக்காரனாக ஏற்றுக் கொள்ளும் என்று கெஞ்சிய இளைய மகனை, தன் மகனாக ஏற்கிறார்.
11. மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் கோபமடைந்து வெளியில் நிற்கிறான். நாம் என்றாவது வியந்ததுண்டா... கர்த்தர் என் தலைவலியை குணமாக்க வில்லையே, யார்யாருக்கோ புற்று நோயை குணமாக்குகிறார்!
இப்படி என்றாவது நினைத்தால் மூத்தகுமாரன் நீர்.
12. தந்தையின் அன்பு மாறாதது. அவனையும் அரவணைத்து 'என்னுடையதெல்லாம் உன்னுடையதாக இருந்ததே' என்று கூறுகிறான்.
இப்பதிவின் மூலம் தேவன் உங்களிடம் பேசினால், இளைய குமாரனின் நிலையை உணர்த்தினால், எந்த நிலையில் இருந்தாலும், வீடு திரும்புங்கள். குறைவு பட்டுத்தான் திரும்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை. இன்றே திரும்பினாலும், கர்த்தரின் அன்பு மாறாதது.
நீங்கள் மூத்தகுமாரன் நிலையில் இருந்தால், 'கர்த்தருடையதெல்லாம் உம்முடையது' என்பதை உணருங்கள். வீண் கோபம் வேண்டாம்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
No comments:
Post a Comment