Monday, 24 October 2016

நம் வாழ்நாட்களில் என்ன செய்தோம் நாம்?

இன்று பல கிறிஸ்தவர்களை ஒரு கேள்வி கேட்க வேண்டும். தினம் எத்துனை நேரம் நீங்கள் கர்த்தருடன் இருப்பீர்கள்? சடுதியாக வரும் பதில், காலை, மாலை என இருவேளை ஜெபிக்கிறோம். ஏறக்குறைய அரை மணிநேரம், ஒவ்வொரு வேளையும் ஜெபிக்கிறோம். இந்த ஜெபங்களில் ஒன்று குடும்ப ஜெபமாக இருக்கும். தனிப்பட்டு அதில் ஒரு 10 நிமிடமே தனி நபர் ஜெபம் இருக்கும்!

நம்மில் பலர் மதசார்பில்லா வேலைகளில் வேலை செய்வதும், மாணவர்கள் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ செல்வதும் வழக்கமாக கொண்டுள்ளோம். வேலைக்கு செல்லும் நேரம், திரும்பி வரும் நேரம் என்று சற்றேறக்குறைய 12 - 13 மணி நேரம் வீட்டிற்கு வெளியே செலவிடுதல் வாடிக்கை. சிலர் overtime, special class என்று இந்த வெளி நேரம் மிகுதியாகுவதும் உண்டு, இரவில் 6 - 10 மணி நேரம் உறங்குகிறோம். மீதம் உள்ள நேரமே, குடும்ப நேரம்.

வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கோ, வீட்டு வேலை, சமையல், பிள்ளைகளை கவனிப்பது, சிறிது நேரம் தொலைக்காட்சி காண்பது, எப்போதாவது அக்கம் பக்கத்து இல்லத்தரசிகளிடம் வம்பு பேசுவது என்று 24 மணி போதவில்லை என்று கூறுபவர் உண்டு!

இப்படிபட்ட நெருக்கடியான நேரப் பற்றாக்குறையில் ஜெபத்திற்கு எங்கே நேரம்? என்று கேட்கின்றீர்களா?

பெற்றோர்களை இன்னொரு கேள்வி கேளுங்கள். உங்கள் பிள்ளை எத்துனை நேரம் ஜெபிக்கிறான்? வாடிக்கையான பதில், ஜெபிக்கவே மாட்டேன் என்றோ. மிகக்குறைவான நேரமே ஜெபம் செய்கிறான்/ள் என்றோ புலம்பாத பெற்றோரை கண்பதரிது. சில குடும்பங்களில் பிள்ளைகள் ஞாயிறு ஆராதனைக்கு தயாராகி அழைத்து வருவதே ஒரு போராட்டம். அல்லது தன் பிள்ளை சபை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை, ஒரு கிரிகெட்டோ, கால் பந்தோ விளையாடும் போது காட்டும் ஆர்வம் ஜெபத்திலோ சபையிலோ இல்லை என்பதே பல பெற்றோரின் புலம்பல்.

இவைகளுக்கு விதிவிலக்காக சில குடும்பங்களும் உள்ளன. மையக் கருத்து இது தான். பெற்றோர் பிள்ளைகளை வழிநடத்தும் பெரிய பொறுப்பிலும், மூத்த பிள்ளைகள் தங்களைவிட சிறியோருக்கு உதாரணமாக இருப்பதையும் உணர வேண்டும்.

நாம் நமது அன்றாட வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் ஜெபிக்கிறோமா? ஒவ்வொரு நாளையும் ஜெபத்தோடும் வேதாகமம் வாசித்தும் தொடங்குகிறோமா? சமையல், வேலைக்கு கிளம்புவது போன்ற சிறு சிறு நிகழ்வுகளிலும் தேவனுடைய ஈவிற்காக நன்றி செலுத்துகிறோமா?

எவ்வளவு மக்கள் சமைக்க ஒன்றுமில்லாமல் திண்டாடுகிறார்கள்? எவ்வளவு மக்கள் நீரில்லாமல் அவதிப் படுகிறார்கள்? கர்த்தர் தந்த நல்ல ஈவுகள் அல்லவா இவை? கிறிஸ்து நமக்கு அன்றாட அப்பம் தாரும் என்று ஜெபிக்க சொல்லிக் கொடுத்தார். அன்றாட அப்பத்திற்காக நன்றி சொல்வது வேண்டாமா?

நம்மில் எவ்வளவு பேர் இரு சக்கர வாகனத்திலோ அல்லது காரிலோ ஏறும் முன்னர் ஜெபிக்கிறோம்? பேருந்து  பயணத்தின் முன்னர் ஜெபிக்கிறோமா? சில நேரங்களில் நடந்து செல்ல நேரிடும் போது கர்த்தாவே நல்ல வலிமையான கால்களை எனக்கு கொடுத்ததற்கு ஸ்தோத்திரம் என்று சொல்லியிருக்கிறோமா?

வேலையிலோ, பள்ளியிலோ நாம் ஜெபிப்பதற்கு தேவை இல்லை என்று எண்ணிவிடுகிறோம். அப்படியல்ல. ஒவ்வொரு வேலைக்கும், மிக மிக சாதாரணமாக உங்கள் காலால் ஒரு அடி எடுத்து நடப்பதற்கும், உங்கள் கையால் ஒரு சிறு துரும்பை அசைப்பதற்கும் ஜெபம் தேவை. இயேசு சொல்கிறார் "என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது" யோவான் 15:5

ஆக, ஜெபிக்காமல், அவரிடம் இருந்து பெலனை பெறாமல் நம்மால் மெய்யாகவே எதையும் செய்யக் கூடாது.

நாம் வெறும் கிளைகளே. நமக்குத் தேவையான நீரோ, ஊட்டச்சத்தோ இல்லாத வெறும் கிளைகள். இயேசுவே மெய்யான திராட்சச்செடி. இயேசுவில் நாம் இணைந்தில்லாமல் இருந்தால், வாடிவிடுவோம். பிதா நம்மை அப்புறப்படுத்தி விடுவார். ஏனெனில், பிதாவே திராட்சத் தோட்டக்காரர்.

ஒரு கிறிஸ்தவ வாழ்க்கைக்கு தினத்தில் அரை மணி நேரம் காலை மாலை ஜெபம் போதாது. திராட்சச்செடியில் எப்போதும் இணைந்து இருப்போமானல், பிதா அதிகமான கனிகளை கொடுக்க நம்மை நம்மை சுத்திகரிக்கிறார்.

என்றாவது, "என்ன கனி கொடுத்தேன் என் கர்த்தருக்காய்?" என்று நினைத்ததுண்டா? கனிகொடுக்க செடியில் இணைந்திருக்க வேண்டுமே!

பவுல் சொல்கிறார்
ரோமர் 7 18....அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மைசெய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை.
19. ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.
20. அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.

செடியில் அவ்வப்போது இணைவதால் வரும் விளைவே இது.

எப்போதும் ஜெபத்தில் இருப்பது அவசியம், ஜெபம் செய்யும் போது நாம் இயேசுவுடன் இணைந்திருக்கிறோம். நாம் ஆவியானவருக்கு நம்மில் வேலை செய்ய இடம் கொடுக்கிறோம். தேவனிடம் "சரணாகதி நீரே" என்று கூறியிருக்கிறீர்களா? கூறுங்கள். செயல் படுத்தி பாருங்கள்!

பவுல் எழுதுகிறார் "எல்லாவற்றிலும் ஸ்தோத்திரம் செய்யுங்கள்" சில நேரங்களில் நமக்கு சாதகமில்லாத நிகழ்வுகள் நடக்கும். நிலை எதுவானாலும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்துங்கள். யோபு, ஸ்தேவான் போல மரண தருவாயிலும் ஜெபம் செய்யுங்கள். கர்த்தருக்கு எல்லா நேரங்களிலும் ஸ்தோத்திரம் செய்வது ஜெபத்தினாலும், விசுவாச  வழக்கத்தினாலும் வரும் ஒன்று.

ஆக ஜெபம் என்பது ஒரு சில நிமிடங்கள் நமக்கு தேவையானதை மட்டும் கேட்டுவிட்டு, நமக்கு தந்த சில ஈவுகளுக்காக ஸ்தோத்திரம் செய்து விட்டு முடிக்கிறது அல்ல. ஜெபம் என்பது ஒரு உறவு. உங்களுக்கும் உங்களை படைத்த கர்த்தருக்கும் நடுவே உள்ள உறவு. உங்களை மெய்யான திராட்சச்செடியோடு இணைக்கும் உறவு. 

முழுவதுமாக இயேசுவை சார்ந்திருங்கள். அவரில்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது என்பதை உணருங்கள். செடியோடு இணைந்து கனி கொடுங்கள்.

செடி கிளைகளுக்கு நீரும் ஊட்டச்சத்தும் கொடுக்க ஆயத்தம். கிளைகளான நீங்கள் ஆயத்தமா?

சத்திய ஆவியானவர் தாமே உங்களை சத்தியத்திற்குள் வழிநடத்துவாராக. ஆமென்.

No comments:

Post a Comment