Tuesday, 18 October 2016

நற்செய்தி கைப்பிரதிகள் - தேவ சித்தம் அறிந்து கொடுங்கள்

அன்பான தேவ பிள்ளையே,

இன்று காலை நடந்த ஒரு நிகழ்ச்சி. என் மகளை அவள் படிக்கும் சிறார் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வழியில் ஒரு சிறு புத்தகம் மணலில் விழுந்து கிடப்பதைக் கண்டேன். எடுத்துப் பார்த்தால் எனக்கு தெரியாத மொழியில் இருந்தது.  (கன்னடமோ அல்லது தெலுங்கோ அப்போது தெரியவில்லை)

ஆவியானவர் எடுக்கச் சொன்னார். எடுத்தேன். அந்த புத்தகம் வேதாகம பகுதி போல் தோன்றியது. மணலை தட்டிவிட்டு, மெல்ல புரட்டினேன். இரு நாட்களாக அது மணலிலும்  மழையிலும் இருந்திருக்க வேண்டும். சிறிது நையத் தொடங்கி யிருந்தது.

என் மகள் கேட்டாள் "Why daddy what book"

நான் சொன்னேன் "Daddy's Book"

முதல் பக்கத்தில் ஆங்கிலத்தில் சிறு எழுத்துகளில்  (fine print) Gospel of John Kannada என்று எழுதியிருந்தது. புத்தகத்தை எடுத்துக் கொண்டு, மகளை பள்ளியில் விட்டு விட்டு வீடு வந்தேன்.

சுவிசேஷத்தை பரப்ப பல முறைகள் உண்டு. தேவனின் அன்புச் செய்தியான யோவான் சுவிசேஷத்தை அச்சிட்டு கொடுத்திருக்கின்றனர் சிலர்.

நிச்சயம் விலையில்லா புத்தகமாகவே கொடுத்திருப்பர். இந்த நிலையில் பல ஆண்டுகள் முன்பு நடந்த சில நிகழ்வுகள் நினைவிற்கு வந்தன.

*முதல் நிகழ்வு*

ஒரு 50 வயது மதிக்கத்தக்க மனிதர்.  ஒருநாள் மாலை எங்கோ சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் ஒரு சுவிசேஷகர் அவரிடம் ஒரு கைப்பிரதியைக் கொடுத்து, ஐயா இந்த கைப்பிரதி அச்சடிக்க 5 பைசா ஆகிறது. உங்களுக்கு இலவசமாகக் கொடுக்கிறேன். ஆதலால் அதை நிச்சயம் படிப்பேன் என்று உறுதி செய்யுங்கள் என்றாராம். நான் உன்னிடம் கைப்பிரதி கேட்கவேயில்லை. இதோ 25 பைசாவை எடுத்துக்கொள். இன்னும் 4 பேருக்கு இலவசமாக கைப்பிரதியை கொடு என்று சொல்லிவிட்டு நடை கட்டியுள்ளார். வீடு வந்து சேர்ந்து தன் மகனிடம் இதை சொல்லியிருக்கிறார். அவரது மகனோ சிறிது காலத்திற்கு முன்னர் தான் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு விக்கிரக ஆராதனை செய்யாமல் வீட்டில் ஒரு சிறு கலகமே செய்து வந்தான். இவனை தாழ்த்திக் கூற அந்த தகப்பனார், பார்த்தாயா உன் இயேசுவின் கைப்பிரதிக்கு 25 பைசாவைக் கொடுத்து 4 பேருக்கு இலவசமாக கொடுக்கச் சொல்லியுள்ளேன். இந்தா 5வது பிரதி என்று கூற, மகனோ, அவர்கள் அனுபவித்த அன்பை நீங்களும் அனுபவிக்க வேன்டும் என்ற நல்லெண்ணத்தில் தான் அவர்கள் சுவிசேஷம் பிரசங்கிக்கின்றார்கள் என்றான் மகன். அப்போ இலவசமாகத்தானே கொடுத்திருக்க வேண்டும் என்று தகப்பன் வாதம் செய்ய, அதன் மதிப்பு உங்களுக்குத் தெரியவே அப்படி சொல்லியிருப்பார் என்று சுவிசேஷகரை மகன் ஆதரித்து பேச, வாக்கு வாதம் முற்றாதிருக்க மகன் அறைக்குள் சென்று தாழிட, பின்னர் அடுத்த நாள் கைப்பிரதி படிக்கப் படாமல் பழைய நாளிதழோடு இருக்கக் கண்ட மகன் வருந்தினான்.

அன்றைய ஜெபத்தில் ஏறெடுத்தான். "அப்பா, பிதாவே, உம்முடைய நற்செய்தியை அறிவிக்க நீர் யாரிடத்தில் வழிநடுத்துகிறீரோ அவர்களுக்கு மட்டும் நான் நற்செய்தி பகிரும் படியாக செய்யும். ஒருவரும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையவேண்டும் என்றாலும், கேட்டின் மகன் கெட்டுப்போவதே உம்சித்தம். ஆக, யாரிடம் இயேசுவை குறித்துச் சொல்ல வேண்டும், யாரிடம் கூடாது, நல்ல முத்துக்களை பன்றிகளின் முன் போடாதிருக்க, கர்த்தாவே நீரே உதவி செய்ய வேண்டும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறேன் ஜீவனுள்ள நல்ல பிதாவே."

*இரண்டாவது நிகழ்வு*

நாட்கள் உருண்டோடின. இந்த மகனின் வாழ்க்கையில் ஆவியானவர் வழிநடத்த சுவிசேஷம் அறிவித்தான். இரண்டு பேர் இயேசுவை ஏற்றுக்கொண்டனர். மற்றோர் ஏற்க மனதில்லாதிருந்தனர்.

அவனுக்கு மிக நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அவன் இரட்சிக்கப்பட்ட கிறித்துவன் என்று தெரியும். மற்றோர் அவனை ஒரு இந்துவாகவே கருதினர். ஆனால் ஒரு தூய வாழ்வை வாழ்ந்து வந்தான். அவன் வேலை செய்யும் இடத்தில் சிலர் அவன் கிறித்துவன் என்பதை அறிவர். அவனிடம் ஒரு பணியாளன் வந்து, "ஐயா என் தாயார் மிகுந்த உடல் நலக் குறைவுடன் இருக்கிறார். நீங்கள் சிலருக்காக ஜெபம் செய்தீர்கள் என்று அறிவேன்.  என் தாயாருக்கு ஜெபம் செய்ய உங்களை வேண்டுகிறேன். எனக்கு ஒரு தெலுங்கு வேதாகமம் கொடுங்கள். என் தாயாரிடம் கொடுக்கிறேன்" என்று கேட்டான். அவர்கள் வேலை செய்த இடம் மஹாராஷ்ராவில். தெலுங்கு வேதாகமம் தேடி வாங்க சில நாட்கள் ஆயிற்று. கையில் வேதாகமம் வந்தது. கொடுக்கலாம் என்று எடுத்துக் சென்றான். அந்த மனிதன் தொடர் விடுப்பில் உள்ளதாகவும், அவர் தாயார் மிகுந்த உடல்நிலை வியாதியுற்றிருப்பதாகவும் கூறினர். தேவ சித்தம் நிறைவேறட்டும் என்று விட்டான் மகன்.

சில நாட்கள் கழித்து ஒரு குடும்பத் தேவைக்காக வேறூர் செல்ல வேண்டியிருந்தது. 2 நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு சென்றான் மகன். வேலை முடிந்து மீண்டும் வந்து, தெலுங்கு வேதாகமத்தை எடுத்துக் கொண்டு அலுவலகம் சென்று விசாரித்தான். அந்த பணியாளன் வேலையை விட்டுவிட்டு ஹைத்ராபாத்திற்கு சென்றுவிட்டதாக கூறினர். அந்த தெலுங்கு வேதாகமம், இன்றும் அவன் வீட்டு புத்தக அலமாரியில் உள்ளது.

என்றோ செய்த ஜெபம் எப்படி வேலை செய்கிறது பாருங்கள். தேவ சித்தம் இருந்தாலேயன்றி யாராலும் தேவனிடம் வர இயலாது. அதற்காக சுவிசேஷம் சொல்லாதிருங்கள் என்று கூறவில்லை. சுவிசேஷம் யாருக்கு சொல்ல வேண்டும் என்று தேவனிடம் கேளுங்கள். எல்லாவற்றையும் விட தேவ சித்தம் நிறைவேற வேண்டும் என்ற ஜெபத்தோடே சுவிசேஷம் சொல்லுங்கள். ஜெபம் கேட்கும் தேவன் நம் தேவன்.

இயேசுவின் உபதேசம்  "மத்தேயு 7:6 பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்."

கால்களால் தேவ வசனம் மிதிபட காரணியாக இருக்காதீர்கள் தேவ பிள்ளையே. நீங்கள் யாருக்கேனும் வேதாகமமோ கைப்பிரதியோ கொடுத்தால், அந்த வேதாகமம் கைப்பிரதி படிக்கப்படாத பட்சத்தில், திரும்ப வாங்கிக் கொள்வது நலம். நம் வேதாகமம் பத்தோடு பதினொன்றல்ல. சத்திய வசனம். ஆதலால் மிகவும் கவனத்தோடு செயல்படுங்கள். இயேசுவின் போதகத்தை ஏற்காத பரிசேயரும், சதுசேயரும் இருந்தனர். இயேசுவிற்கே அந்நிலை. நாமெல்லாம் எம்மாத்திரம்! ஒரே ஒரு வாக்குதத்தத்தோடு முடிக்கிறேன். "உங்களை ஏற்றுக்கொள்ளாதவன், இயேசுவை ஏற்றுக்கொள்ளாதிருக்கிறான். இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவன், இயேசுவை அனுப்பிய பிதாவை ஏற்றுக்கொள்ளாதிருக்கிறான்"

கர்த்தர் உங்களுக்கு தம் சித்தம் நிறைவேற்ற வழிநடத்துவாராக. ஆமென்.

No comments:

Post a Comment