எந்நேரத்திலும் யேகோவா என்னும் நாமமுள்ள பிதாவாகிய தேவனை மாத்திரம் முன்னிறுத்தி, அவரை மட்டுமே மகிமை படுத்தி, ஆவியானவரின் வழிநடத்துதலின் படி ஒவ்வொரு கணநேரமும் இயேசுவின் நற்செய்தியை வாழ்ந்து, பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுபவர்களே தேவ ஜனம் என்றழைக்கப்பட தகுதியுள்ளோர்.
தேவன் நம்மை இப்படி வனைய, குயவன் கையில் ஈரக் களிமண்ணாக நம் வாழ்வை ஒப்புக் கொடுப்போம்.
எந்தவொரு நிலையும் தேவனுக்கு பெரிதானதல்ல... நம் தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை. நம் இரட்சகர் சொல்கிறார் "விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்"
என்னே ஒரு வாக்குதத்தம்! தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை! விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்!
அல்லேலூயா!
நம்மிடத்தில் இயேசு பெரும் விசுவாசத்தை கேட்கவில்லை. கடுகு விதையளவு விசுவாசமே கேட்கிறார்.
ஆக விசுவாசம் மட்டும் இருந்தால் போதுமா?
நான் விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, உம்மால் இதை செய்யக் கூடும் ஆண்டவரே, ஜெபத்தை கேட்டருளும் என்று முட்டி மோதி ஜெபிக்கும் மக்களின் மத்தியில், என் தேவன் எனக்கு என்ன கொடுக்க சித்தமாயிருக்கிறாரோ, அது என்னை வந்தடையும். என் பணி அவர் சித்தத்தை செய்து முடிப்பதே என்று கிரியைகளை செய்வோர் எத்துனை?
இதோ என் ஆத்துமாவை வாங்கத் தேடுகிறார்கள், என் ஆத்துமாவை எடுத்துக் கொள்ளும் என்று சூரைச்செடியின் கீழ் படுத்திருந்த எலியாவை இரண்டு முறை எழுப்பி ஆகாரம் கொடுத்து,
ஆவியானவர் நடக்கச் சொன்னார், நாற்பது நாள் ஆகாரம் கூட இல்லாமல் நடக்கும் எலியாவின் கிரியையை நினைவு கூருங்கள்.
யெசபேலை விட கர்த்தருடைய கரம் குறுகியதோ? ஆயினும் ஒரு பரதேசியைப் போல தேவ ஆவியானவர் சொன்னதால் நாற்பது நாள் ஆகாரமில்லாது ஓரேப் மலை வரை நடந்த எலியா. கடுகளவு விசுவாசம் எனக்குள் உள்ளது. ஆகையால் என்ன தீங்கு என்னை மேற்கொள்ளும். இதோ இப்போது தானே அக்கினியால் உத்தரவு கொடுத்தார் தேவன். நான் ஏன் ஓட வேண்டும் என்று அவன் கேட்டானா?
ஓடியதாலே கர்த்தருடைய மகிமையை, அவர் முன்செல்லும் சமூகத்தை கண்டான். ஆயினும் கர்த்தர் என்ன சொல்லுகிறார், "பாகாலை ஆராதனை செய்து முடங்காத ஏழாயிரம் பேர் இஸ்ரவேலில் வைத்திருக்கிறேன்"
ஐயா... அதெல்லாம் மிகப் பழைய நிகழ்வுகள் என்று நினைக்கிறீர்களா, புதிய ஏற்பாட்டிலும் பல உதாரணங்கள் உள்ளன
இயேசுவின் வாழ்க்கையில் பார்க்கிறோம்.... திமிர்வாதக்காரனை சுமந்து வந்த மனிதரின் விசுவாசத்தை இயேசு பார்க்கிறார். விசுவாசத்தை மட்டுமல்ல, தூக்கிக் கொண்டு கூரையை பிரித்து இறக்கும் கிரியையையும் பார்க்கிறார்.
என் வாழ்க்கை, என் குடும்பம், என் ஆசீர்வாதம், நான் இயேசுவை காணவேண்டும், நான் அவர் உபதேசத்தை கேட்டால் போதும், என அந்த வீட்டில் கூடியிருந்த மக்கள் நினைத்த போது, 'இவன் எப்படி போனால் எனக்கென்ன?', என்று விடாமல், கூரையை பிரித்தேனும் இறக்குவோம் வாருங்கள்... இவன் சுகமாக வேண்டும்... என்ற விசுவாசக் கிரியையை கண்ட இயேசு குணமாக்குகிறார்.
யாக்கோபின் நிரூபத்தில் படிக்கிறோம் "கிரியை இல்லா விசுவாசம் செத்த விசுவாசம்" யாக்கோபு விசுவாசத்தின் தகப்பன் என்று போற்றப்படும் ஆபிரகாமே கிரியையினால் நீதிமானாக்கப் பட்டான் என்று எழுதியிருப்பதை காணுங்கள்.
இதே போல் பற்பல உதாரணங்கள் உண்டு.
ஆக, தேவ பிள்ளையே, தேவ சித்தத்தை கேட்டு, அப்படியே ஆகுமென விசுவாசித்து, 'தேவனே இந்த சித்தத்தில் என் பங்கு என்ன?' என்று கேட்டு, அவர் சொல்லிற்கு கீழ்படிந்து கிரியை செய்வதே தேவ பிள்ளைகள் வாழ்வில் இன்றியமையாதது.
பிதாவின் சித்தம் செய்பவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பான். இது இயேசுவின் சத்திய வாக்கு.
பிதாவின் சித்தம் செய்ய ஒப்புக் கொடுங்கள். அவர் என்ன செய்யச் சொன்னாலும் கீழ்படிந்து செய்யுங்கள்.
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
No comments:
Post a Comment