இன்றைய வேத வாசிப்பு பகுதியில் கிறிஸ்துவைப் போல் வாழ்க்கை நடத்த குறிப்புகள்
1. உணவில்லாது 3 நாட்கள் தன்னுடனே இருந்த மக்களைக் கண்டு 'பரிதபிக்கிறேன்' என்கிறார். இங்கு காண வேண்டிய மிக நுண்ணிய காரியம் 3 நாட்கள் அவரோடு உணவில்லாது இருந்த 4000 பேர். இயேசுவின் போதனைகளை கேட்க, செவிக்கு உணவு வேண்டி வயிற்றுப் பசியை அடக்கிய மக்கள்.
2. 'பட்டினியாய் அனுப்பிவிட்டால் வழியில் சோர்ந்து போவார்களே' என்றார். ஆக, அனுப்பினால் செவிக்கு உணவு இல்லாதிருக்கும் போது... நீண்ட தூரம் உள்ள தங்களது வீட்டிற்குச் செல்லும் வழியில் சோர்ந்து போவார்கள், உணவு அவர்களுக்குத் தேவை என்று அறிந்தவராகக் கூறுகிறார்.
3. தேவ மைந்தன் இயேசுவின் போதனைகளைக் கேட்க வெகு தொலைவி லிருந்தும் மக்கள் வந்திருந்தனர்.
4. சில நாட்களுக்கு முன்னராகத் தான் 5 அப்பம் 2 மீன்கள் கொண்டு 7000 பேர் பசி தீர்த்த இயேசுவின் அற்புதச் செய்கையைக் கண்டிருந்தும், சீஷர்கள் அவரை கேட்கும் விதத்தைக் காணுங்கள்! " எங்கேயிருந்து அப்பத்தை கொண்டுவருவோம்". விசுவாசமில்லாத சீஷர்களை இயேசு கடிந்துக் கொள்ளவில்லை. மாறாக "எத்தனை அப்பங்கள் இருக்கிறது" என்று வினவுகிறார். நாமும் சில நேரங்களில் இப்படித்தான் விசுவாசமில்லாது, "ஆண்டவரே இது எப்படி ஆகும்" என்று மனதிலே ஐயத்தோடே இருக்கிறோம். ஆனால் கடுகு அளவு விசுவாசத்தை தான் இயேசு தேவை என்று கூறுகிறார். ஏழு அப்பங்கள் என்ற பதில் போதுமானதாக இருந்தது. ஐயா நமக்கென இருந்த அப்பங்கள் இவை என்று சீஷர்கள் கூறவில்லை.
5. இயேசு கடடளையிட்டப்படி பந்தியிருக்கச் செய்கிறார்கள். விசுவாசத்தினாலே செய்யப்பட்ட கிரியை.
6. இயேசு 4000 பேரை பந்தியிருக்கச் செய்து, ஸ்தோத்திரம் செய்து பிட்டு பகிரும்படி கொடுப்பதைக் காணுங்கள். இயேசு செய்யப் போவதை முன்பே அறிந்திருக்கிறார். அவர் யோவான் 5:9ல் வாசிக்கிறோம் "மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்." ஆக அவர் செய்யப் போகும் அற்புதம் இன்னவென்று அறிந்திருக்கிறார். பிதா செய்வதைக் கண்டும் இருக்கிறார். ஆனாலும் ஸ்தோத்திரம் செய்து பிட்டுக்கு கொடுக்கிறார். பிதாவிற்கு ஸ்தோத்திரம் செய்த பின்னரே பிட்டுக் கொடுக்கிறார்.
தம்மால் நடந்தது என்ற மனமேட்டிமை வாராமல், இந்த அண்ட சராசரமும் படைத்த இயேசு (யோவான் 1:3ல் வாசிக்கிறோம் "சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை"), ஸ்தோத்திரம் செய்யும் மனத்தாழ்மையை நாம் அனைவரும் அவரிடம் கற்க வேண்டிய பாடமல்லவா!
7. உண்டு முடித்தப் பின்னர் துணிக்கைகள் எடுக்கிறார்கள். துணிக்கைகளை வைத்து என்ன செய்யப் போகிறார்கள்? உண்டதுப் போக மிச்சம் மீதி. கொச்சையாய் சொன்னால் எச்சில் துண்டுகள். தேவனால் ஆசிர்வதிக்கப் பட்டவை எதுவும் வீணாய் போகாமல் இருக்க, பிள்ளைகளின் அப்பத்தை நாய்கள் உண்ணாதிருக்க, ஆசிர்வாதம் எப்போதும் மிகையாகவே கொடுக்கப் படுகிறது. குறைவில்லை என்பதை உணர்த்த துணிக்கைகள் சேர்க்கப் படுகின்றன. நம் வாழ்க்கையில் தேவனுடைய ஆசீர்வாதங்களை வாங்கி எத்தனை முறை "துணிக்கைகளை" வீணடித்துள்ளோம்? உதாரணமாக, எத்தனை முறை உணவை வீணடித்துள்ளோம்? நீருக்காக சண்டைப் போடுகிறோம், ஆனால், கர்த்தர் தரும் மழை நீரை சேகரிக்காமல் விட்டுவிடுகிறோம். ஆசீர்வாதங்களை வீணடிக்கும் வழக்கம் நமக்குள் மாறவில்லை!
8. தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்போம் நாம். ஆதலால் தேவ வார்த்தை எதுவும் வீண் என்று எண்ணாதீர். எனக்கு ஞாயிறு தேவ செய்தியில் ஒன்றுமில்லை என்று தள்ளிவிடாதிருங்கள் தள்ளி விடடால் வீணடிக்கிறீர்கள். வீணடிப்பது கர்த்தருக்கு ப்ரீதியானதல்ல. அறிவோம். தெளிவோம்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
No comments:
Post a Comment