Tuesday, 18 October 2016

கிறிஸ்தவ வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய வரைமுறைகள் - பகுதி 1

கிறிஸ்தவ வாழ்க்கையின் இன்றியமையாது கடைப்பிடிக்க வேண்டியவை - பாகம் - 1

இயேசு நம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய சில இன்றியமையாத வரைமுறைகளை கொடுத்துள்ளார்.

மலை பிரசங்கத்தில் இயேசு ஜெபிக்க கற்றுக்கொடுக்கும் போது

"பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக." (மத்தேயு 6:9-10)

ஆக, நாம் தேவனுடைய சித்தம் செய்யப்படுவதற்கு ஜெபிக்க வேண்டும்.

ஜெபித்தால் மட்டும் போதுமா?

நிச்சயம் இல்லை!

மத்தேயு 7 வாசித்தால், கள்ள தீர்க்கதரிசிகள் குறித்து இயேசு போதிக்கும் போது "பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை."

பிதாவின் சித்தத்தை நீங்கள் செய்கிறீரா நண்பரே? பிதாவின் சித்தம் என்னவென்று அறியாவிட்டால் எப்படி செய்வீர்கள்?

முந்தைய பதிவில் நாம் கண்டோம், இயேசு அதிகாலையிலேயே ஜெபம் செய்ய தனியே சென்றார். யோவான் 5:19ல் இயேசு சொல்வதைக் காணுங்கள் "மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்."

ஆக, தேவன் இயேசுவிற்கு செய்து காட்டுகிறார்.

நாம் தேவனிடம் "நான் என்ன செய்ய வேண்டுமோ அதை எனக்குச் செய்து காட்டும் கர்த்தாவே" என்றாவது கேட்டிருப்போமா? கேட்டால் தானே பெற்றுக் கொள்வோம்? ஒரு இருட்டறையில் நாம் துப்பாக்கி கொண்டு சுட்டால், அந்த அறையில் உள்ள பொருட்களை வீண் செய்வோம், குண்டுகள் வீணாகும். சுட வேண்டியது அந்த அறையில் இல்லாமல் கூட இருக்கலாமல்லவா?

எவ்வளவு முறை நாம் கண்டிருக்கிறோம், தேவ செய்தியை கைப்பிரதி மூலமாக, வேதாகமம் மூலமாக இருட்டறையில் சுடுவது போலே கொடுக்கும் மக்களை? அது தேவ சித்தமா? நற்செய்தி அறிவிக்க இயேசு பணித்தார். ஆம்.

ஆனால் அவரே தான் மலைப் பிரசங்கத்தில் சொல்லுகிறார், பிதாவின் சித்தம்படி செய்பவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பான்.

ஒவ்வொரு முறை தேவ செய்தியை, கைப்பிரதியை நீங்கள் கொடுக்கும் போதும், தேவனுடைய சித்தம் இது தானா என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்.

நம் தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. அவராலே இந்த உலகத்தில் உள்ள அனைவரையும் ஒரே நிமிடத்தில் இரட்சிக்க முடியும். ஆனால் அது தேவ சித்தமா? இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் நன்மை தீமை தெரிந்துக் கொள்ளூம் பகுத்தறிவை (Free Will) தேவன் கொடுத்திருக்கிறார். நாம் நற்செய்தி பரப்புகிறோம் என்றெண்ணி தேவ சித்தத்தை விட்டு விலகலாமா? இயேசு யோவான் 6ல் கூறுகிறார்

"பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை."

நாம் செய்ய வேண்டியது ஒன்றே. தேவ சித்தம் என்னவென்று அறிந்து கொள்வது.

நாம் ஜெபிக்கும் போது கர்த்தருக்கு காத்திருந்த்து, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அவரிடம் தெரிந்து கொள்வதே.

நம் கர்த்தர் அற்புதம் செய்பவர் மட்டுமல்ல, அவர் பேசும் தெய்வம். மற்ற தேவர்களைப் போலே பேசாத விக்கிரகம் அல்லவே. அவர் பேசும் வார்த்தைகளை கேட்க முடியாதிருக்கும் நண்பர்களே, இன்றே உங்கள் செவியை திறந்தருள வேண்டிக் கொள்ளுங்கள். 

தேவனுடைய சித்தத்தின்படி நம் வாழ்வில் செய்வதே முதல் இன்றியமையாத வரையறை.

சித்தத்தின்படி செய்ய, தேவ சித்தத்தை அறிய வேண்டும். அறிவதற்கு அவர் பேசும் வார்த்தையை கேட்க வேண்டும்.

தேவ சித்தத்தை உங்கள் செவிகளால் கேட்டறியுங்கள். அவர் தம் சித்தத்தை உங்களுக்கு வெளிப்படுத்த காத்துக்கொண்டிருக்கிறார்.

கர்த்தர் உங்களோடே அவர் சித்தம் குறித்து பேசி வழி நடத்துவாராக. ஆமென்.

No comments:

Post a Comment